கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 மருந்தகங்களுக்கு ‘சீல்’
திருக்கோவிலூர் அருகே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக 3 மருந்தகங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் மற்றும் கூவனூர் பகுதியில் உள்ள சில மருந்தகங்களில் அரசு விதிமுறைகளை மீறி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலாவுக்கு புகார் சென்றது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன், துணை தாசில்தார் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், மருந்து ஆய்வாளர் சுகன்யா, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ் மற்றும் சங்கரன் ஆகியோர் திருப்பாலபந்தல் மற்றும் கூவனூர் பகுதியில் உள்ள மருந்தகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பாலபந்தல் கிராமத்தில் 2 மருந்தகங்களிலும், கூவனூரில் ஒரு மருந்தகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நடவடிக்கை
இதையடுத்து அங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 3 மருந்தகங்களையும் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து மருந்தக உரிமையாளர்களான சிவப்பிரகாசம், இளையராஜா மற்றும் பாண்டியன் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story