ஊட்டியில் குழந்தைகள் வார்டில் மேலும் 80 படுக்கைகள் தயார்


ஊட்டியில் குழந்தைகள் வார்டில் மேலும் 80 படுக்கைகள் தயார்
x
தினத்தந்தி 21 Jun 2021 11:18 PM IST (Updated: 21 Jun 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா 3-வது அலையை சமாளிக்க ஊட்டியில் குழந்தைகள் சிறப்பு வார்டில் மேலும் 80 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி,

கொரோனா 3-வது அலையை சமாளிக்க ஊட்டியில் குழந்தைகள் சிறப்பு வார்டில் மேலும் 80 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளது.

சிறப்பு வார்டு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள் காலியாகி வருகின்றன. 

மொத்தம் 155 ஆக்சிஜன் படுக்கைகளில் 84 படுக்கைகள் காலியாக உள்ளது. அதேபோல் கொரோனா சிகிச்சை மையங்களிலும் பூரண குணமடைந்து செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் படுக்கைகள் காலியாகி வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பால் நீலகிரிக்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. பழைய தளர்வுகளின்படி முழு ஊரடங்கு தொடர்கிறது.

இதற்கிடையே கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 3-வது அலையை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, 25 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் மன்றம் குழந்தைகள் சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு இருக்கிறது.

80 படுக்கைகள் தயார்

அங்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு சுவிட்ச் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டது. கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. பெரிய அரங்கு மற்றும் 2 அறைகளில் 100 படுக்கை வசதிகள் அமைக்கப்படுகிறது. 

முதல் கட்டமாக 80 படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் கட்டில், மெத்தைகள் போடப்பட்டு இருக்கின்றன. அங்கு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு ஆஸ்பத்திரி அருகே இருப்பதால் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். கொரோனா பாதித்து குழந்தைகள் வந்தால் இயற்கை உபாதைகளை கழிக்க தற்காலிகமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று நகராட்சி சார்பில் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த ஊழியர் கிருமிநாசினி தெளித்து சிறப்பு வார்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

Next Story