பறிமுதல் செய்யப்பட்ட 300 மதுபாட்டில்கள் அழிப்பு
ஜெயங்கொண்டம் பகுதியில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 300 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
தனிப்படை அமைப்பு
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதிகளில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை மற்றும் சட்டவிரோத மது விற்பனை என சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிற்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின்படி சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மதுபாட்டில்கள் அழிப்பு
இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே விஜயா, கல்லாத்தூர் மலர், வடவீக்கம் கருணாநிதி மற்றும் கூடலிங்கம், தண்டலை மங்கலம் வேல்முருகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் உள்ள மகிமைபுரம் கிராமம் அருகே கருவேல மரக்காட்டில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் முன்னிலையில் போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
Related Tags :
Next Story