வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை
குண்டாடா அரசு பள்ளி சார்பில் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிகிறது.
கோத்தகிரி,
குண்டாடா அரசு பள்ளி சார்பில் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிகிறது.
அரசு பள்ளி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில மற்றும் தமிழ் வழிக்கல்வி உள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடை வழங்கப்படுகிறது.
இது தவிர விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்கப்படுத்துவது, ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியர்கள் சிறந்து விளங்குகின்றனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
மாணவர் சேர்க்கை
இந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு, அரசு வேலையில் முன்னுரிமை போன்ற சலுகைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் குண்டாடா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆசிரியர்கள் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கெட்டிகம்பை, புடியங்கி கிராமங்களுக்கு வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.
திட்டங்கள்
மேலும் அரசு பள்ளியில் காலை மற்றும் மதிய உணவு, சீருடை, காலணி, புத்தகங்கள், புத்தகப்பை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து எடுத்துக்கூறுகின்றனர். இதனால் அந்த பள்ளியில் ஒரே நாளில் புதிதாக 9 குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர்களின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் சார்பில் பாராட்டு குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story