சாலை வசதி கோரிய மாற்றுத்திறனாளியின் டுவிட்டர் பதிவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர்-பணிகள் தொடக்கம்

சாலை வசதி கோரிய மாற்றுத்திறனாளியின் டுவிட்டர் பதிவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர்-பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 3 July 2021 4:56 PM GMT (Updated: 3 July 2021 4:56 PM GMT)

மாற்றுத்திறனாளி ஒருவர் சாலை வசதி கோரி தர்மபுரி மாவட்ட கலெக்டரின் டுவிட்டர் பக்கத்தில் தனது கோரிக்கை மனுவை பதிவிட்டார். அவரது பதிவை பார்த்த கலெக்டர் திவ்யதர்சினி உடனடியாக சாலை அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

தர்மபுரி:

மாற்றுத்திறனாளி
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. மாற்றுத்திறனாளியான இவர் தையல் கடை நடத்தி வருகிறார். நடக்க முடியாத இவர் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வரும் மண் சாலை தாழ்வான இடத்தில் இருந்து மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் மூலமாக அந்தப்பகுதியில் அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தவழ்ந்து சென்று சிரமப்பட்டு வந்தார். 
இந்நிலையில் இந்த பகுதியில் மண் சாலையால் தனக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும் மண் சாலை உள்ள பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுப்பினார்.
பணி தொடக்கம்
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட கலெக்டருக்கான டுவிட்டர் கணக்குக்கு இந்த கோரிக்கை குறித்த மனுவை அண்மையில் அனுப்பினார். இந்த நிலையில் இந்த கோரிக்கை குறித்து கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவுப்படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினார்கள். அதன் அடிப்படையில் அங்கே மண் சாலை இருந்த பகுதியில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்சினி கூறும் போது, ‘தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் டுவிட்டர் உள்பட எந்த முறையில் கோரிக்கைகள், புகார்கள் அனுப்பினாலும் அந்த மனுக்களின் உண்மை தன்மை குறித்து உடனடியாக விசாரித்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

Next Story