முகலிவாக்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்


முகலிவாக்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 19 July 2021 11:19 PM GMT (Updated: 19 July 2021 11:19 PM GMT)

முகலிவாக்கத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 156-வது வார்டு பகுதியான முகலிவாக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காலி இடத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த காலி இடத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

நோய்கள் பரவும்

இந்த பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் சுற்றுப்புறம் எங்கும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்கள் பரவ வழிவகுக்கும். கடந்த ஆட்சியில் செயல்படுத்திய இந்த திட்டத்தை அப்போதே நாங்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியதால் மாற்று இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அரசு முயற்சி மேற்கொண்டது.

ஆனால் தற்போது அந்த இடத்தில் அதிகப்படியான பாறைகள் இருப்பதாக காரணம் கூறி மீண்டும் எங்களது குடியிருப்பு அருகிலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலந்தூர் ஆர்.டி.ஓ. யோகஜோதி, தாசில்தார் சரவணன் தலைமையிலான வருவாய் துறையினரும், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான மாங்காடு போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாற்று இடத்தில் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுப்பதாக உறுதி கூறினர். அதனை ஏற்று பொதுமக்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story