ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவியிடம் 12 பவுன் நகைகள் கொள்ளை


ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவியிடம் 12 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 22 July 2021 3:28 PM GMT (Updated: 2021-07-22T20:58:32+05:30)

ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவியிடம் 12 பவுன் நகைகள் கொள்ளை

பேரூர்

தொண்டாமுத்தூர் அருகே வீடு புகுந்து ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவியிடம் 12  பவுன் தங்க நகைகளை முகக்கவசம் அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

ஓய்வு பெற்ற அதிகாரி

கோவை தொண்டாமுத்தூர் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 78). 

இவர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலராகவும், முன்னாள் ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ரத்தினம் (75). இவர்களுடைய மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினர். 

இதையடுத்து டாக்டர் களின் அறிவுரையின் பேரில் அவர்கள் தங்களை வீட்டின் தனித்தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ராமசாமியின் வீட்டின் முன்பக்க கேட்டில் ஏறி குதித்து 2 மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்தனர். அங்கு வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. 

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்தனர்.

12 பவுன் நகை கொள்ளை

அங்க ஒரு அறையில் ராமசாமியும், மற்றொரு அறையில் ரத்தினமும்  படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். உடனே மர்ம ஆசாமிகள் ராம சாமி தூங்கிக்கொண்டு இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டினர். 

பின்னர் அவரது மனைவி ரத்தினம் தூங்கி கொண்டிருந்த அறைக்குள் புகுந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்கச் சங்கிலியை கத்திரிக்கோலால் வெட்டி எடுத்தனர்.

அதன்பிறகு அவர் கையில் அணிந்திருந்த 3½ பவுன் வளையலை கத்திரிக்கோலால் வெட்டினர். அந்த சத்தம் கேட்டு ரத்தினம் திடுக்கிட்டு கண்விழித்து எழுந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம ஆசாமிகள் கையில் கிடைத்த 12 பவுன் தங்கநகையுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவானது

உடனே ரத்தினம் தனது கணவர் அறைக்கு சென்றார். அந்த அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அந்த அறையை திறந்து உள்ளே சென்று தனது கணவரை எழுப்பி நடந்த சம்பவம் பற்றி கூறினார்.


இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

முகக்கவசம் அணிந்து சென்றனர்

இது குறித்து போலீசார் கூறும்போது, வயது முதிர்வு காரணமாக அந்த தம்பதி, வீட்டின் பின்பக்க கதவை மூட மறந்து விட்டனர். 

இதனால் அந்த வழியாக மர்ம நபர்கள் புகுந்து ரத்தினம் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். 

வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். இதில், மர்ம ஆசாமிகள் தங்களை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்து கொண்டு வீட்டிற்குள் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. 

அவர்களை கண்டறிய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர். 


Next Story