கூடுதல் நிதி ஒதுக்கி நந்தன் கால்வாயை தரமாக சீரமைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


கூடுதல் நிதி ஒதுக்கி நந்தன் கால்வாயை தரமாக சீரமைக்க வேண்டும்  விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 July 2021 10:12 PM IST (Updated: 27 July 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் நிதி ஒதுக்கி தரமான முறையில் நந்தன் கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கணக்கன்குப்பத்தில் இருந்து பனமலை ஏரி வரை அமைக்கப்பட்டிருந்த 7 கி.மீ. கால்வாயுடன் திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சல் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர கடந்த 1970-ம் ஆண்டு நந்தன் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் கீரனூரில் தடுப்பணை கட்டி பனமலை ஏரி வரை 37.86 கி.மீ. துாரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.40 கி.மீ. தூரமும், விழுப்புரம் மாவட்டத்தில் 25.46 கி.மீ. தூரமும் அடங்கும்.


இத்திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகள் மட்டுமின்றி பனமலை ஏரியில் இருந்து செல்லும் உபரிநீர் மூலம் முட்டத்தூர், சங்கீதமங்கலம், வெள்ளேரிப்பட்டு உள்ளிட்ட12 ஏரிகள் என மொத்தம் 36 ஏரிகள் நேரடியாக பயனடையும்.

 அதுமட்டுமின்றி மறைமுகமாக பல ஏரிகளுக்கு நீர் ஆதாரமாகவும் நந்தன் கால்வாய் விளங்கும். இதுதவிர இந்த கால்வாய் தண்ணீர் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் 5,032 ஏக்கர் விவசாய நிலங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,566 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.


ரூ.35 கோடியில் சீரமைப்பு பணி

இத்திட்டத்திற்காக பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் பணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு வரை ரூ.14 கோடியே 76 லட்சத்து 50 ஆயிரம் செலவிடப்பட்டும் இத்திட்டத்தின் முழு பயனும் விழுப்புரம்- திருவண்ணாமலை மாவட்ட மக்கள், விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அடுத்து வந்த ஆண்டுகளில் பராமரிப்பின்றி கால்வாய் தூர்ந்துபோனது.

இதையடுத்து விழுப்புரம்- திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி கடந்த 2020-ம் ஆண்டு சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பில் இக்கால்வாயை தூர்வாரும் பணியை தொடங்கினர்.

 இவர்களின் முயற்சியால் கடந்த ஆண்டு பனமலை ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நந்தன் கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகளும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினரும் அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் அரசு சார்பில், விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.27.50 கோடியும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.7.5 கோடியும் என மொத்தம் ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.


தரமற்ற முறையில்


இதனை தொடர்ந்து நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் போடப்படும் கான்கிரீட் மிகவும் மெல்லியதாக தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கலெக்டர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

நந்தன் கால்வாயில் அமைக்கப்படும் சிமெண்டு கால்வாய் மிகவும் மெல்லியதாக 65 எம்.எம். (2½ இன்ச்) கனத்தில் அமைத்து வருகின்றனர். இவ்வாறு தரமற்ற முறையில் அமைத்தால் ஒரு சில ஆண்டுகளிலேயே இக்கால்வாய் பழுதடையும். 

நந்தன் கால்வாய் வெட்டிய 45 ஆண்டுகளில் பலமுறை அரசு சார்பில் சீரமைப்பு பணிகளை செய்தும் இந்த கால்வாய் முழுமையான பாசன பயன்பாட்டுக்கு வரவில்லை. இவை 2 மாவட்டத்திற்கும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமாகும். இது நூற்றாண்டு கால கனவு திட்டமாகும். எனவே மாவட்ட கலெக்டர், இப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.


மேலும் 2020-21-ம் ஆண்டு நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிக்கான முழுமையான செயல்திட்ட நகல் எங்களுக்கு கிடைக்கவில்லை, இப்பணி குறித்த கள ஆய்வுக்கு விவசாயிகளை அழைப்பதும் இல்லை. இதுவரை செய்யப்பட்ட பணிக்கு தொழில்நுட்ப தணிக்கை செய்ய வேண்டும்.

 இத்திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து சிமெண்டு கால்வாய் கனஅளவை உயர்த்தி தரமான முறையில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். கால்வாய் கரைப்பகுதி சேதமடையாமல் இருக்கும் வகையில் கரைப்பகுதி முழுவதிலும் தார் சாலை அமைக்க வேண்டும். அதுபோல் சாத்தனூர் அணை- நந்தன் கால்வாய் இணைப்பு திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

கூடுதல் நிதி தேவை

விழுப்புரம்- திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 45 ஆண்டுகால கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று இத்திட்டத்திற்கான கூடுதல் நிதி பெற்று இக்கால்வாயை முழுமையாக சீரமைத்து நீண்ட நாள் கனவு திட்டமான இத்திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Next Story