தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18¾ பவுன் நகை கொள்ளை


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18¾ பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 27 July 2021 8:16 PM GMT (Updated: 27 July 2021 8:16 PM GMT)

நாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18¾ பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18¾ பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொள்ளை
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் ஜோடோனியல் தெருவை சேர்ந்தவர் ஜோசப் எட்வின் (வயது 62). இவர் மஸ்கட் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
தற்போது நாகர்கோவிலில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜோசப் எட்வின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். அவர் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு அறையில் துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அந்த அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 18¾ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி ஜோசப் எட்வின் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டின் உள்ளே புகுந்து 18¾ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 
அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர்.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியையும் கைப்பற்றி கொள்ளையனை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story