தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 July 2021 8:38 PM GMT (Updated: 29 July 2021 8:38 PM GMT)

தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

சேலம்
சுற்றுலா பயணிகள்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று தமிழக அரசு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
ஆனால் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் இருந்தபடியே பல்வேறு இடங்களை சுற்றிபார்த்துவிட்டு திரும்பி செல்வதை காணமுடிகிறது.
மலைப்பாதையில் நீர்வீழ்ச்சி
இது ஒருபுறம் இருக்க, ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. அதேசமயம், சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் 40 அடி பாலம் உள்ளிட்ட பல்வேறு வளைவுகளில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக 3-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அருவிபோல் தண்ணீர் விழுகிறது.
இதனால் ஏற்காட்டிற்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், அதை பார்த்தவுடன் தங்களது வாகனங்களை நிறுத்தி இறங்கி அந்த அருவியை சிறிது நேரம் ரசித்தும், தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். ஒருசிலர் தண்ணீரில் இறங்கி ஆனந்த குளியலும் போட்டு செல்கின்றனர்.
பூங்காக்களை திறக்க கோரிக்கை
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டில் உள்ள பூங்காங்களை திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story