தடையை மீறி தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் தடையை மீறி தர்ப்பணம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் பிரசித்தி பெற்ற வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் வைகை ஆற்றின் கரையோரத்தில் அமைந்து இருப்பது தனிசிறப்பு. இதனால் இந்த கோவிலுக்கு ஆடி அமாவாசை தினத்தையொட்டி வருபவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைகை ஆற்றில் குளித்து விட்டு செல்வார்கள்.
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க ஆடி அமாவாசை தினத்தில் முக்கிய கோவில்கள், நீர்நிலைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி அணைப்பட்டி வைகை ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் 8-தேதி இரவு வரை சாமி தரிசனம் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆடி அமாவாசையையொட்டி வைகை ஆற்றுக்கு மக்கள் வருவதை தடுக்க ஏராளமான போலீசார் நேற்று காலையில் குவிக்கப்பட்டனர். அவர்கள் வைகை ஆற்று கரையோர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசாரின் தடையை மீறி திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, விருவீடு மற்றும் மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வைகை ஆற்று கரையில் நேற்று குவிந்தனர். அவர்கள் வைகை ஆற்றில் நீராடிவிட்டு, தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அரசின் விதிமுறைகளை காற்றிலே பறக்கவிட்டு, சமூக இடைவெளி இன்றி ஏராளமானவர்கள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பழனி சண்முகநதி கரையில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தர்ப்பணம் செய்ய வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story