பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் ஒரே நாளில் 17 திருமணங்கள்


பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் ஒரே நாளில் 17 திருமணங்கள்
x
தினத்தந்தி 21 Aug 2021 1:39 AM IST (Updated: 21 Aug 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் ஒரே நாளில் 17 திருமணங்கள் நடந்தன.

பெரம்பலூர்:

கோவில்கள் மூடல்
ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் கடந்த செவ்வாய்க்கிழமைதான் பிறந்தது. ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாள் மற்றும் முதல் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம், பிரதோஷம் ஆகிய விசேஷங்கள் நேற்று வந்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆடி மாதம் பேசி நிச்சயிக்கப்பட்ட ஏராளமான திருமணங்கள் நேற்று நடைபெற்றன.
இந்து மதத்தை சேர்ந்தவர்களின் திருமணங்கள் பெரும்பாலும் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களில் கோவில்கள் மூடப்படுகிறது. இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல் கோவில்கள் மூடப்பட்டு காட்சியளித்தன.
எளிய முறையில் திருமணம்
இதனால் கோவில்களில் நடத்த அனுமதி பெற்றிருந்த திருமணங்கள் அனைத்தும், கோவிலின் முன்பு எளிய முறையில் நடந்தன. அதன்படி பெரம்பலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலின் முன்பு மட்டும் நேற்று ஒரே நாளில் 17 திருமணங்கள் நடைபெற்றன.
இதில் 10 திருமணங்கள் கோவிலில் முறைப்படி அனுமதி பெற்றும், 7 திருமணங்கள் அனுமதியின்றியும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கோவிலின் முன்பு அதிகாலை முதல் காலை 10 மணி வரை அடுத்தடுத்து திருமணங்கள் நடைபெற்றதாலும், மணமக்களின் உறவினர்கள் கூட்டத்தாலும் கோவில் விழாக்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. ஆனால் அந்த திருமணங்களில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story