பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயற்சி


பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 29 Aug 2021 1:17 AM IST (Updated: 29 Aug 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் அருகே இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடையார்பாளையம்:

வீட்டுமனை பட்டா வழங்க...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஆதிச்சனூர் கிராமத்தில் உள்ள 4 பேரிடம் இருந்து, சுமார் 2½ ஏக்கர் இடத்தை கடந்த 1996-ம் ஆண்டு அரசு விலைக்கு வாங்கியது. அந்த இடத்துக்கான தொகையை உரிமையாளர்களின் வங்கி கணக்கில் அரசு செலுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் 66 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால் இடத்தின் உரிமையாளர்கள், அந்த இடத்தினை தரமுடியாது என்று கூறி, 2 முறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2 முறையும் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில் நேற்று காலை அந்த இடத்தை அளவீடு செய்து, ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க போலீசாருடன், வருவாய்த்துறையினர் ஆதிச்சனூர் கிராமத்துக்கு சென்றனர். அந்த கிராமம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, இடத்தை அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
அப்போது, இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களான செல்வம்(வயது 35), பிரியா(30), மேகலா(35), மீனாட்சி(30), வேம்பு(45) ஆகியோர், அந்த நிலத்தை அளவீடு செய்யக்கூடாது. அரசு வழங்கிய தொகை குறைவாக உள்ளது. தற்போது உள்ள மதிப்பீட்டை கணக்கிட்டு பணம் தர வேண்டும் என்று கூறி தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இடத்தை அளவீடு செய்தனர்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீக்குளிக்க முயன்ற 5 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர். மேலும் அவர்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, உரிய பாதுகாப்புடன் இடத்தினை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story