பள்ளி, கல்லூரிகளுக்கு படையெடுத்த மாணவர்கள்


பள்ளி, கல்லூரிகளுக்கு படையெடுத்த மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Sep 2021 4:41 PM GMT (Updated: 2021-09-01T22:11:31+05:30)

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் படையெடுத்தனர். அவர்களுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

திண்டுக்கல்:

பள்ளி, கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதன் எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி  தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.

பள்ளியை பொறுத்தவரை 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அரசு உத்தரவு காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. முன்னதாக பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில், வகுப்பறைகளில் உள்ள இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன. பள்ளி வளாகங்களில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது. 

 உடல் வெப்பநிலை பரிசோதனை

இதேபோல் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்கு வசதியாக பள்ளி, கல்லூரிகளில் ஒவ்வொரு வகுப்பறைகள் முன்பும் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருந்தது. இதுதவிர மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் இந்த கல்வியாண்டில் முதல் முறையாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர இருப்பதால் அவர்களை வரவேற்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்த பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று சீருடை அணிந்தும், புத்தக பைகளை சுமந்துகொண்டும் உற்சாகமுடன் பள்ளிக்கு வந்தனர். கல்லூரி மாணவ-மாணவிகளும் தங்களுக்கு பிடித்த உடைகளை அணிந்துகொண்டு புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக கல்லூரிகளுக்கு படையெடுத்தனர்.

 வகுப்பறையில் சமூக இடைவெளி

பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். 

மேலும் ‘தெர்மல்’ ஸ்கேனர் மூலம் மாணவ-மாணவிகளின் உடல்வெப்பநிலையை சோதனை செய்த பின்னரே பள்ளி, கல்லூரிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரே இலவசமாக முக கவசம் வழங்கினர். பின்னர் ஒரு வகுப்பறையில் 20 மாணவ-மாணவிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டனர்.

இணை இயக்குனர் ஆய்வு

நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்கள் மற்றும் தோழிகளை பார்த்த மாணவ-மாணவிகள் விடுமுறை நாட்களை எப்படி கழித்தோம் என்று தங்களது நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். 

வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்த மாணவ-மாணவிகளின் மனநிலையை மாற்றும் வகையில் நன்னெறி கதைகளை ஆசிரியர்கள் கூறினர். மேலும் ஆன்லைன் வகுப்புகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். 

திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-----------
 (பாக்ஸ்) 78 சதவீத மாணவர்கள் வருகை

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 395 அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 52 ஆயிரத்து 956 மாணவர்கள், 52 ஆயிரத்து 339 மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 295 பேர் படிக்கின்றனர். 

இவர்களில் ஆன்லைன் வகுப்புகளை தொடர விரும்பும் மாணவர்கள் தவிர மற்ற அனைவரும் நேற்று பள்ளிக்கு வந்தனர். மாவட்டம் முழுவதும் 78 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story