விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்
x
தினத்தந்தி 1 Sep 2021 5:13 PM GMT (Updated: 1 Sep 2021 5:13 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வந்தனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது பெருந்தொற்று பாதிப்பு சரிந்து வருவதை அடுத்து, 2021-2022-ம் கல்வியாண்டில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

 இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது. 
அந்த வகையில்,  விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என 172 உயர்நிலைப்பள்ளிகளும், 185 மேல்நிலைப்பள்ளிகளும் மற்றும் 28 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் ஆக மொத்தம் 385 பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

தனிமனித இடைவெளி

இத்தனை நாட்களாக ஆன்லைன் மூலம் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்க போகிறோம்  என்ற உற்சாக மிகுதியில் முககவசம் அணிந்து பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்தனர்.

முன்னதாக அவர்களின் உடல் வெப்பநிலையை ஆசிரியர்கள் பரிசோதனை செய்து, பள்ளிக்குள்  அனுமதித்தனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்தபடியே மாணவ, மாணவிகள் அமரவைக்கப்பட்டனர். 

தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் பாடங்களை மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நடத்தினர். மாவட்டத்தில்  9, 10-ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என 2,114 பேரும், 11, 12-ம் வகுப்பு முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் என 1,042 ஆசிரியர்களும் பணிக்கு வந்திருந்தனர். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடிவடைந்தது.

கலெக்டர் ஆய்வு

இதனிடையே மாவட்ட கலெக்டர் டி.மோகன், நேற்று காலை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க. வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 ஆய்வின்போது மாநில முறைசாரா வயது வந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் கல்வி அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 18 கண்காணிப்பு குழுவினர்,  திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 11 கண்காணிப்பு குழுவினர், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 9 குழுக்களும் என மொத்தம் 38 கண்காணிப்பு குழுவினர் பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.


Next Story