வருகிற 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்போம் - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா


வருகிற 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்போம் - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 2 Sep 2021 8:50 PM GMT (Updated: 2 Sep 2021 8:50 PM GMT)

கர்நாடகத்தில் வருகிற 23-ந்தேதி நடைபெறும் சட்டசபை தேர்தல் பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

அமித்ஷா வருகை

  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வருகை தந்தார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் உப்பள்ளிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தாவணகெரேவுக்கு அமித்ஷா வந்தார். அதைத்தொடர்ந்து, தாவணகெரேயில் நடந்த 3 நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

  தாவணகெரே மாவட்டம் ஹரிகராவில் புதிதாக அமைக்கப்பட்ட காந்தி பவனை மத்திய உள்துறை மந்திரி திறந்து வைத்தார். இதுபோல், ஹரிகராவில் அமைக்கப்பட்டு உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியையும், மத்திய நூலகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமித்ஷா பேசியதாவது:-

பசவராஜ் பொம்மை தலைமையில்...

  பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்-மந்திரி ஆகியுள்ளார். அவரும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதில் இருந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகத்தில் அடுத்து நடைபெறும் (வருகிற 2023-ம் ஆண்டு) சட்டசபை தேர்தலை சந்திப்போம். முன்வரும் நாட்களில் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி இன்னும் பலப்படுத்தப்படும்.

மனித குலத்திற்கு சவால்

  கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாகவும், மற்ற மாநிலங்களை காட்டிலும் கர்நாடகம் வளா்ச்சி பணிகளில் இனிவரும் நாட்களில் முன்னிலை வகிக்கும். மனித குலத்திற்கே பெரும் சவாலாக கொரோனா உள்ளது. கொரோனாவுக்கு நமது நாடு மட்டுமின்றி உலக நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா, பொருளாதார பிரச்சினையை மத்திய அரசு சரியாக எதிர் கொண்டு வருகிறது.

முன் எச்சரிக்கை நடவடிக்கை

  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடகத்திலும் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முடிந்துள்ளது. உலகத்திலேயே அதிகமான தடுப்பூசி இந்தியாவில் தான் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக நமது நாடு இருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 1 கோடியே 43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  முன்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கும் குறிக்கோள் மத்திய அரசுக்கு உள்ளது.

போராட்டம் தொடரும்

  கொரோனாவுக்கு எதிராக போராடும், கொரோனா முன்கள பணியாளர்கள் உயிர் இழப்பது வேதனை அளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பின்னோக்கி செல்லும் பேச்சுகே இடமில்லை. கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
  தாவணகெரேயில் ரூ.50 கோடி செலவில் 3 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த 3 திட்டங்களை நான் தொடங்கி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
  இவ்வாறு அமித்ஷா பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் மத்திய மந்திரி ஜி.எம்.சித்தேஷ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எடியூரப்பாவுக்கு புகழாரம்

தாவணகெரேயில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை புகழ்ந்தார்.

அதாவது, தென்னிந்தியாவில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியவர் எடியூரப்பா. அவர், 2 ஆண்டுகள் கா்நாடக முதல்-மந்திரியாக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார். விவசாயிகள், ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி எடியூரப்பா செயல்படுத்தி இருந்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் எடியூரப்பா சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கர்நாடகத்திற்கு புதியவர் ஒருவர் முதல்-மந்திரியாக வர வேண்டும் என்று தனது பதவியை எடியூரப்பா தியாகம் செய்திருந்தார் என்று அமித்ஷா புகழாரம் சூட்டினார்.

Next Story