சென்னை கோயம்பேட்டில் படப்பிடிப்புக்கு அலங்கார பொருட்கள் வைத்திருந்த குடோனில் பயங்கர தீ விபத்து


சென்னை கோயம்பேட்டில் படப்பிடிப்புக்கு அலங்கார பொருட்கள் வைத்திருந்த குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 3 Sep 2021 10:23 PM GMT (Updated: 3 Sep 2021 10:23 PM GMT)

சென்னை கோயம்பேட்டில் படப்பிடிப்புக்கு தேவையான அலங்கார பொருட்கள் வைத்திருந்த குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை,

சென்னை கோயம்பேடு சீனிவாசா நகரில் தனியார் பள்ளி வளாகத்தில் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் சின்னத்திரை சினிமா படப்பிடிப்புக்கு அமைக்கப்படும் அரங்கில் வைக்கப்படும் அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று மாலை அந்த குடோனில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் குடோனில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தீ விபத்தில் குடோனில் இருந்த படப்பிடிப்புக்கு தேவையான அலங்கார பொருட்கள் அனைத்தும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த அலங்கார பொருட்களில் ரசாயன சாயம் இருந்ததால் விண்ணை நோக்கி பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது.

தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதியில் உள்ள மரங்கள் உள்ளிட்டவைகள் தீயில் கருகின. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

4 தீயணைப்பு வாகனம்

உடனடியாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் உத்தரவின் பேரில், கோயம்பேடு தியணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடோனில் எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு குடோனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

படப்பிடிப்புக்கு தேவையான அலங்கார பொருட்களில் உள்ள ரசாயன சாயத்தால்தான் புகை அதிகமாக கிளம்பியதாகவும், இந்த விபத்தில் அங்கிருந்தவர்களுக்கு உடலில் தீக்காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழைய இரும்பு குடோனில் தீ

சென்னையை அடுத்த தாம்பரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 50). இவர், கிஷ்கிந்தா சாலையில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் வைத்துள்ளார். இங்கு பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை பழைய வாசனை திரவிய பாட்டில்களை உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். எதிர்பாராதவிதமாக வாசனை திரவிய பாட்டில்களில் இருந்த கியாசால் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியதால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த சரக்கு வாகனம் மற்றும் பழைய பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 ஊழியர்கள் லேசான தீக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story