பா.ஜ.க. அலுவலகத்தில் 5 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு


பா.ஜ.க. அலுவலகத்தில் 5 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 10 Sep 2021 5:36 PM GMT (Updated: 10 Sep 2021 5:36 PM GMT)

விழுப்புரம் பா.ஜ.க. அலுவலகத்தில் தடையை மீறி 5 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். இதனை அகற்ற முயன்ற அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சிவதியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுகுமார், பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் துரை சக்திவேல், ஊடகப்பிரிவு தலைவர் தாஸசத்யன், நிர்வாகிகள் பழனி, ராஜுலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி அரசின் தடை உத்தரவை மீறி 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை கட்சி அலுவலக நுழைவாயில் முன்பு பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, அரசின் உத்தரவை பின்பற்றியே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறும், தடையை மீறி வைத்துள்ள சிலையை உடனடியாக அகற்றுமாறும் பா.ஜ.க.வினரிடம் அறிவுறுத்தினர். இதனை அவர்கள் ஏற்க மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். 
பின்னர் மாலை 6 மணி வரை சிலையை வைத்து வழிபாடு செய்துவிட்டு அதன்பிறகு தாங்களே சிலையை எடுத்துக்கொள்வதாக அதிகாரிகளிடம் பா.ஜ.க.வினர் கூறினர். அதன்படி மாலை 6 மணி வரை வழிபாடு செய்துவிட்டு அதன் பிறகு அந்த சிலையை அங்கிருந்து அலுவலகத்திற்குள் எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் செஞ்சி சத்திரதெருவில் இந்து முன்னணி சார்பில் விழுப்புரம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் எஸ்.வி.சிவசுப்பிரமணியம் இல்லத்தின் வெளியே 3 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர்.

Next Story