பொதுமக்களை அழைத்துவந்து தடுப்பூசி செலுத்த வேண்டும்-கண்காணிப்பு அலுவலர் பேச்சு


பொதுமக்களை அழைத்துவந்து தடுப்பூசி செலுத்த வேண்டும்-கண்காணிப்பு அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 11 Sep 2021 4:22 PM GMT (Updated: 11 Sep 2021 4:29 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடக்கும் சிறப்பு முகாம்களுக்கு பொதுமக்களை, அதிகாரிகள் அழைத்துவந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 630 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம்களில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்த ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அலுவலர் மற்றும் மீன்வளத் துறை கூடுதல் ஆணையர் சஜ்யன் ஆர்.சவான் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை முகாமிற்கு அழைத்துவந்து தடுப்பூசி செலுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாவட்டத்தில் 456 ஊரகப் பகுதிகளிலும், அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய நகர சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 174 பகுதிகளிலும் என மொத்தம் 630 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு ஆற்காடு நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி கையிருப்பு மற்றும் முகாமிற்கு தேவைப்படும் தடுப்பூசிகள் கொண்டுவரப்படும் குளிர்சாதனப் பெட்டி தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்தும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

Next Story