பாரதியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை


பாரதியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 11 Sep 2021 5:23 PM GMT (Updated: 2021-09-11T22:53:58+05:30)

பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 எட்டயபுரம்:
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபம், நினைவு இல்லத்தில் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர போராட்ட தியாகிகள் அனைவரையும் கவுரவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். மகாகவி பாரதியாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். எழுத்து, கவிதைகள் வழியாக நாட்டு விடுதலைக்கு உழைத்திட்ட மகாகவி பாரதியார் நினைவு தினமான செப்டம்பர் 11-ந் தேதி அரசு சார்பில் ஆண்டுதோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பெண் உரிமை, பெண் கல்விக்காக குரல் கொடுத்த பாரதியாரின் கவிதைகள் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. அவை தற்போதைய காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது. அவருடைய உணர்வுகளை, தியாகத்தை உலகறிய செய்ய வேண்டும், நமது இளைஞர்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்து 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். 

அவரது அறிவிப்புகள் ஊக்கப்படுத்தக்கூடிய அறிவிப்புகள். பாரதியார் பெருமையை பறைசாற்றும் வண்ணமாக, புகழை உலகெங்கும் பரவ செய்யும் விதமாக முதல்வரின் அறிவிப்புகள் உள்ளன. இதற்காக அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக ்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

Next Story