திருச்செங்கோடு அருகே மொபட்டில் சென்றபோது பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.4½ லட்சம் பறிப்பு-ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருச்செங்கோடு அருகே மொபட்டில் சென்றபோது பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.4½ லட்சம் பறிப்பு-ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Sep 2021 6:03 PM GMT (Updated: 2021-09-11T23:33:33+05:30)

திருச்செங்கோடு அருகே மொபட்டில் சென்றபோது பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.4½ லட்சம் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

எலச்சிபாளையம்:
ரூ.4½ லட்சம் பறிப்பு
திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 43). இவர் சித்தாளந்தூர்-ஜேடர்பாளையம் பிரிவு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பெட்ரோல் பங்கில் வசூலான தொகை ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் செலுத்த நேற்று காலை திருச்செங்கோடு நோக்கி மொபட்டில் சென்றார். பணத்தை ஒரு பையில் போட்டு மொபட்டின் முன் பகுதியில் வைத்திருந்தார்.
வழியில் திருச்செங்கோடு அருகே மண்கரட்டுமேடு என்ற இடத்தில் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தவாறு 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென அவர்கள் வேணுகோபால் மொபட்டின் முன் பகுதியில் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.
வலைவீச்சு
பின்னர் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அவர்களை வேணுகோபாலால் பிடிக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன அவர் இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து, பணத்தை பறித்து விட்டு தப்பியோடிய 3 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே மொபட்டில் சென்ற பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story