நெல்லை, தென்காசியில் 20 மையங்களில் நடந்தது: 6,719 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர் செயின், தோடு, அரைஞாண்கயிற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்


நெல்லை, தென்காசியில் 20 மையங்களில் நடந்தது: 6,719 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர் செயின், தோடு, அரைஞாண்கயிற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்
x
தினத்தந்தி 13 Sept 2021 2:47 AM IST (Updated: 13 Sept 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

6,719 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர்

நெல்லை:
நெல்லை, தென்காசியில் 20 மையங்களில் நடந்த நீட் தேர்வினை 6,719 மாணவ-மாணவிகள் எழுதினர். கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தங்களது செயின், தோடு, அரைஞாண்கயிறு போன்றவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்.
நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6,997 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 3 இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்பதற்காக பெரும்பாலான மாணவ-மாணவிகள் காலை 9 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வந்தனர். காலை 10.40 மணியளவில் கடும் பரிசோதனைக்கு பின்னர் மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுப்பாடுகள்
மாணவ-மாணவிகள் உலோகத்தாலான எந்த பொருட்களையும் தேர்வறைக்கு கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அவர்கள் அணிந்திருந்த செயின், மோதிரம், தோடு உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி அரைஞாண்கயிறு போன்றவற்றை தங்களது பெற்றோர்களிடம் கழட்டி கொடுத்து விட்டு சென்றனர்.
மாணவ-மாணவிகளுக்கு உடல்வெப்பநிலையை பரிசோதித்து, கைகழுவும் திரவம் வழங்கினர். பின்னர் தேர்வறையில் மாணவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு மையம் அருகில் மாணவர்களுக்கு முக கவசம், பேனா போன்றவை வழங்கப்பட்டது. பாளையங்கோட்டையில் உள்ள மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர் வெள்ளி அரைஞாண்கயிறு அணிந்து சென்றதால், மெட்டல் டிடெக்டர் கருவியில் அலாரம் ஒலித்தது. எனவே அவர் வெள்ளி அரைஞாண்கயிற்றை கழற்றி கொடுத்து விட்டு, கருப்பு கயிற்றை அணிந்து சென்றார்.
6,719 பேர் எழுதினர்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மையங்களில் மொத்தம் 6,719 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 278 பேர் தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வையொட்டி பல்வேறு மையங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தடையற்ற மின்சாரமும் வினியோகம் செய்யப்பட்டது.
தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினரும் தயாராக இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
பாளையங்கோட்டையில் நீட் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
மாணவர்கள் கருத்து
நீட் தேர்வில் உயிரியல் பாடம் மிகவும் எளிமையாக இருந்தது. வேதியியல் பாடத்தில் சில கடினமான கேள்விகள் கேட்கப்பட்டது. இயற்பியல் பாடத்திலும் எதிர்பார்த்த கேள்விகள் வராமல் கடினமாக இருந்தது. எனினும் தேர்வை நன்றாக எழுதி உள்ளோம்.
கொரோனா ஊரடங்கால் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே கணினி மூலம் பல்வேறு தகவல்களை திரட்டி படித்ததால் எளிதாக தேர்வை எழுத முடிந்தது. எனினும் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story