3 பேரை கொன்ற யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது
3 பேரை கொன்ற யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது
தேன்கனிக்கோட்டை, செப்.15-
தேன்கனிக்கோட்டையில் 3 பேரை கொன்ற யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
3 பேரை கொன்ற யானை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் கடந்த 10-ந் தேதி விவசாயிகள் 2 பேரை காட்டு யானை ஒன்று கொன்றது. அதன்பிறகு 12-ந் தேதி கெலமங்கலத்தை அடுத்த பச்சப்பனட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்ற விவசாயியையும் யானை தாக்கி கொன்றது. 3 பேரை அடுத்தடுத்து யானை தாக்கி கொன்றதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட போன்பள்ளம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அதாவது, மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, வனச்சரகர்கள் சுகுமார், முருகேசன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காட்டுக்குள் விரட்டினர்
இதனால் யானை, நொகனூர் வழியாக ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு சென்றது். கர்நாடகா மாநில வனத்துறையினர் அங்கிருந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அப்போது வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களான அகலகோட்டை, பாலதொட்டனப்பள்ளி, ஜவளகிரி, லக்கசந்திரம், திப்பசந்திரம் உள்ளிட்ட கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
ஆனாலும் யானையை வனத்துறையினர் மிகவும் சாதுர்யமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி சென்றனர். யானையும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகு யானை அச்சத்தில் இருந்த பல்வேறு கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருந்தாலும் யானை மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனப்பகுதியை ஓட்டிய கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story