வாழப்பாடி அருகே வேலை வழங்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்-53 பேர் கைது
வாழப்பாடி அருகே வேலை வழங்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 53 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே வேலை வழங்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 53 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுங்கச்சாவடி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதியுடன் சுங்கச்சாவடி குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து குஜராத்தை சேர்ந்த புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு, சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட காரணத்தால் 30 ஊழியர்கள் இருந்தால் போதும் என்று கூறி 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை இல்லை என்று திருப்பி அனுப்ப முயன்றனர். இதனால் கடந்த 20 நாட்களாக ஊழியர்கள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் நேற்று வாழப்பாடி தாசில்தார் வரதராஜன் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 11 ஆண்டுகளாக வேலை பார்த்த எங்களுக்கு திடீரென்று வேலை இல்லை என்று கூறுவது சரியில்லை. எனவே எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
சுங்கச்சாவடியில் இருந்து 800 மீட்டருக்குள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கோர்ட்டில் சுங்கச்சாவடி நிர்வாகம் தடை உத்தரவு பெற்று இருந்தது. இதன் காரணமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 11 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 53 பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர். தொடர்ந்து நேற்று மதியம் கைதான சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிடவில்லை. பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story