வாலிபர் அடித்துக்கொலை


வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 21 Sept 2021 1:34 AM IST (Updated: 21 Sept 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மதுக்கூர்:
மதுக்கூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செல்போன் நம்பர் கேட்டுள்ளார்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 24). இவரது மனைவி சத்யா(24). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினருக்கு 1Ñ வயதில் பெண் குழந்தை உள்ளது. அருண்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். 
இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் ராஜாங்கம் மகன் விஜய் (23). கூலி வேலை செய்து வந்த இவர், அருண்குமார் மனைவி சத்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சத்யாவின் மாமியார் தேன்மொழி, விஜய்யை கண்டித்து உள்ளார்.
போலீசில் புகார்
பின்னர் இது குறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்திலும் தேன்மொழி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார், விஜய்யை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து கண்டித்து உள்ளனர். அதன்பிறகு எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்து உள்ளனர். 
இந்த நிலையில் சத்யாவின் கணவர் அருண்குமார் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்து உள்ளார். அன்று மாலை விஜய்யை, வல்லரசு என்பவர் வடசேரியில் உள்ள மதுக்கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அடித்துக்கொலை
அப்போது அருண்குமார் மற்றும் அவரது நண்பர் பரத் ஆகிய இருவரும் வடசேரி செல்லும் வழியில் உள்ள நெம்மேலி கண்ணனாறு அருகே விஜய்யை பார்த்து உள்ளனர். இருவரும் விஜய்யிடம், சத்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டது தொடர்பாக கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர். 
இந்த தகராறு முற்றியதில் அருண்குமாரும், அவரது நண்பர் பரத்தும் சேர்ந்து விஜய்யை தாக்கி உள்ளனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டு விஜய் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இரவு நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என விஜய்யின் தந்தை ராஜாங்கம் தேடியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அந்த வழியே சென்றவர்கள் விஜய் இறந்து கிடந்ததை பார்த்து தகவல் தெரிவித்து உள்ளனர். 
3 பேருக்கு வலைவீச்சு
இது குறித்து விஜய்யின் தந்தை ராஜாங்கம் மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட விஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜாங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் அருண்குமார், பரத், வல்லரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story