ராட்சத அலையில் சிக்கி கொத்தனார் சாவு


ராட்சத அலையில் சிக்கி கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 21 Sep 2021 6:29 PM GMT (Updated: 21 Sep 2021 6:29 PM GMT)

சொத்தவிளை கடலில் குளித்த போது, ராட்சத அலையில் சிக்கி கொத்தனார் இறந்தார். மகள் கண் எதிரே இந்த சம்பவம் நடந்தது.

மேலகிருஷ்ணன்புதூர்:
சொத்தவிளை கடலில் குளித்த போது, ராட்சத அலையில் சிக்கி கொத்தனார் இறந்தார். மகள் கண் எதிரே இந்த சம்பவம் நடந்தது.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொத்தனார்
நாகர்கோவிலை அடுத்த தெங்கம்புதூர் அருகே உள்ள தெற்கு பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 64), கொத்தனார். நேற்று மாலை 4 மணி அளவில் பாலகிருஷ்ணன், மகள் ரேவதி மற்றும் 3 பேரப்பிள்ளைகளுடன் சொத்தவிளை கடலில் குளிக்க சென்றார். ரேவதி மற்றும் அவருடைய 3 குழந்தைகளும் குளித்து விட்டு கரைக்கு வந்தனர். ஆனால் பாலகிருஷ்ணன் கடலில் குளித்து கொண்டு இருந்தார்.
ராட்சத அலை 
அப்போது ஒரு ராட்சத அலை வந்ததை தொடர்ந்து அதில் பாலகிருஷ்ணன் சிக்கிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அந்த அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் கடல் நீரில் தத்தளித்து கொண்டு இருந்தார். இதை பார்த்த ரேவதி மற்றும் அவருடைய குழந்தைகள், பால கிருஷ்ணனை காப்பாற்றக்கோரி அபய குரல் எழுப்பினர்.
இந்த சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, கடலில் இறங்கி அரை மணி நேரம் போராடி பாலகிருஷ்ணனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் கடலில் தத்தளித்த பாலகிருஷ்ணன் கரைக்கு வந்ததும் பரிதாபமாக இறந்தார். உடலை பார்த்து மகள் ரேவதியும், அவருடைய குழந்தைகளும் கதறி அழுதது, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
விசாரணை
இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் குழும போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 
மகள் கண் எதிரே தந்தை ராட்சத அலையில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story