தொழிலாளி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் திருட்டு


தொழிலாளி கவனத்தை திசை திருப்பி  ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 23 Sep 2021 7:16 PM GMT (Updated: 23 Sep 2021 7:16 PM GMT)

தொழிலாளி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சத்தை திருடி சென்று விட்டனர்.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை கோவிலூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (வயது 56). தொழிலாளி. இவர், கந்தர்வகோட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, அதை ஒரு பையில் வைத்தார். பின்னர் அந்த பையை சைக்கிளில் மாட்டிக்கொண்டு முஸ்லிம் தெரு வழியாக தனது வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சைக்கிளில் வந்த ரகுபதியின் கவனத்தை திசை திருப்புவதற்கு, சில பத்து ரூபாய் நோட்டுகளை சைக்கிளின் பின் பகுதியில் சிதற விட்டு, அவரிடம் உங்கள் பணம் கீழே கிடப்பதாக கூறியிருக்கிறார்கள். உடனே ரகுபதியும் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு 10 ரூபாய் நோட்டுகளை பொறுக்கி எடுக்க தொடங்கினார். இந்த சமயத்தில் மர்மநபர்கள் சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பையை திருடி கொண்டு சென்று விட்டனர். இதன் பின்னர் தனது சைக்கிளில் இருந்த பணப்பை திருடப்பட்டு இருப்பதை கண்ட ரகுபதி அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் மர்மநபர்களை தேடி பார்த்தார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ரகுபதி கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story