தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி சாவு - ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி சாவு - ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 6:06 AM GMT (Updated: 6 Oct 2021 6:06 AM GMT)

பொன்னேரியில் தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி இறந்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது.

செங்குன்றம், 

பொன்னேரி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் குமார் (வயது 38). இவரது மனைவி ரேவதி (28). இவர்களுடைய மகள் லட்சிதா (7). இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 27-ந்தேதி லட்சிதா உடல் நலக்குறைவால் பொன்னேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர் ஊசி போட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் லட்சிதாவின் கழுத்தில் கட்டி ஏற்பட்டது. கட்டி பெரிதாக மாறிய நிலையில் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்த உடன் மீண்டும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேல்சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் பின்னர் சென்னை குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துவிட்டார்.

தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி இறந்ததாக கூறி பொன்னேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டு அங்கு இருந்த நாற்காலிகளை தூக்கி வீசியும் விளம்பர பலகைகள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெற்றோர் பொன்னேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story