எறிபத்த நாயனாரின் பூக்குடலை விழா


எறிபத்த நாயனாரின் பூக்குடலை விழா
x
தினத்தந்தி 14 Oct 2021 12:25 AM IST (Updated: 14 Oct 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

எறிபத்த நாயனாரின் பூக்குடலை விழா கரூரில் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர், 
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதாவது கல்யாண பசுபதீஸ்வரருக்கு சிவகாமி ஆண்டார் என்ற முனிவர் சுவாமிக்கு சாற்ற பூக்களை கொண்டு வரும் போது புகழ்சோழர் அரசனுக்கு சொந்தமான பட்டத்து யானை, முனிவர் கையில் இருந்த பூக்குடலையை தட்டி விட்டது.
இதனை கண்ட எறிபத்த நாயனார், தன் கையில் இருந்த கோடாரியால் பட்டத்து யானையின் துதிக்கையை வெட்டினார். மேலும் யானையுடன் வந்த பாகனையும், அரச வீரர்களையும், யானையும் வெட்டி கொன்றார்.
பூக்குடலை விழா
இதனை அறிந்த புகழ்சோழர் அரசர் தனது படையுடன் வந்து நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு காரணமாக அமைந்த தன்னையும் வெட்டி கொன்றுவிடுமாறு எறிபத்த நாயனாரிடம் வேண்டினார். அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார். மேலும் இறந்தவர்களை உயிர்பித்து அருள் செய்தார்.
மகா அஷ்டமி நாளில் நடந்த இந்த வரலாறு தான் எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவாக நடந்து வருகிறது. அதன்படி மகாஅஷ்டமி நாளான நேற்று  ஒரு தனியார் திருமண மண்டபத்தில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா நடந்தது.
சிறப்பு அபிஷேகம்
எறிபத்த நாயனார், புகழ்சோழ அரசர், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சன நீராட்டும், அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனம் அழைத்து வரப்பட்டு, அங்கு சிவகாமி ஆண்டவர் பூக்குடலையுடன் வருதலும், யானை அதனை தட்டிவிடுதலும், யானையின் துதிக்கையை துண்டித்தல் நிகழ்வும் நடைபெற்றது. 
அப்போது புகழ்சோழர் அரசர் படை வீரர்களை போன்றவர்கள் தரையில் படுத்து கிடந்தும், மன்னர் வேடமணிந்த ஒருவரும் நடித்துக்காட்டினர். அப்போது சாமி, அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story