கர்நாடகத்தில் போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க அரசு முயற்சி- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க அரசு முயற்சி- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Oct 2021 1:24 AM IST (Updated: 20 Oct 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க அரசு முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

போலீஸ் நிலையங்கள் காவி மயம்

  கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி சிந்தகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் மணகுலியை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

  இந்த இடைத்தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எம்.சி.மணகுலி எம்.எல்.ஏ. இறந்ததால் இந்த தேர்தல் வந்துள்ளது. அவரது மகனை நாங்கள் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். ஆயுதபூஜையையொட்டி சில போலீசார் காக்கி சீருடையை கழற்றிவிட்டு, காவி உடையை அணிந்து பூஜை செய்துள்ளனர். போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க இந்த அரசு முயற்சி செய்கிறது. இதை சகித்துக்கொள்ள முடியாது. இடைத்தேர்தல் முடிந்ததும், இதை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.

வாக்காளர்களே அதிபர்கள்

  நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அமைதியை காக்க அரசியல் சாசனத்தில் போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் போலீசார் நடந்து கொள்கிறார்கள். இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ஜனநாயகத்தில் வாக்காளர்களே அதிபர்கள். உங்களின் முடிவே இறுதியானது.

  நாட்டில் இளைஞர்கள் வேலைகளை இழந்துவிட்டனர். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஏராளமானவர்கள் இறந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி நிதி உதவி தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. அதன் பயன் மக்களுக்கு கிடைத்ததா?. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நான் மின்துறை மந்திரியாக பணியாற்றினேன். அப்போது பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் புதிதாக 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்தோம். ஆனால் மாநிலத்தில் தற்போது நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உணவு பொட்டலங்கள்

  காங்கிரஸ் ஏழைகளின் பக்கம் உள்ளது. பசித்தவர்களுக்கு 2 கோடி உணவு பொட்டலங்களை வழங்கினோம். காய்கறி விலை குறைந்தபோது காங்கிரசார் விவசாயிகளிடம் நேரடியாக அதை கொள்முதல் செய்து உதவினோம். சுமார் ரூ.100 கோடி அளவுக்கு காய்கறிகளை வாங்கினோம்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story