புதிய குடிநீர் திட்ட பிரச்சினையில் சுமுக தீர்வு காண நடவடிக்கை


புதிய குடிநீர் திட்ட பிரச்சினையில் சுமுக தீர்வு காண நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2021 8:18 PM IST (Updated: 21 Oct 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்ட பிரச்சினையில் சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேனி: 


ஆய்வுக்கூட்டம்
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு குழுவின் தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்த குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அமலு (குடியாத்தம்), பெரியபுள்ளான் என்ற செல்வம் (மேலூர்), தேன்மொழி (நிலக்கோட்டை), நல்லதம்பி (கங்கவல்லி), வேலு (மைலாப்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

சுமுக தீர்வு
கூட்டத்தை தொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தயார் நிலையில் உள்ளன. அவற்றை வழங்குவதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும். இந்த பிரச்சினையில் சுமுக தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் நாகராஜன், மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், இந்த குழுவினர் கோம்பை சிக்காட்சியம்மன் கோவில், சின்னமனூர் அப்பிப்பட்டி, தப்புக்குண்டு ஆகிய இடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து வைகை அணையில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

Next Story