தர்மபுரி மாவட்டத்தில் நாளை 6-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்- 585 இடங்களில் நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் நாளை 6-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 585 இடங்களில் நடக்கிறது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி வரை முதல் தவணையாக 7 லட்சத்து 62 ஆயிரத்து 39 பேருக்கும், 2-வது தவணையாக 2 லட்சத்து 33 ஆயிரத்து 586 பேருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 62 சதவீதத்துக்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 6-வது கட்டமாக கொரோனா தொற்று தடுப்பூசி முகாம் 585 இடங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 86 ஆயிரத்து 215 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் வட்டார அளவில் துணை கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக மாவட்டம் முழுவதும் 50 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த தடுப்பூசி முகாமில் விடுபட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், முன் களப்பணியாளர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பங்கேற்று 100 சதவீத தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டமாக தர்மபுரியை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story