வானூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க அ.தி.மு.க. இடையே கடும் போட்டி


வானூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க   அ.தி.மு.க. இடையே கடும் போட்டி
x
தினத்தந்தி 21 Oct 2021 11:24 PM IST (Updated: 21 Oct 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடக்கும் மறைமுக தேர்தலில் வானூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. மரக்காணத்தில் தலைவர் பதவிக்கு ஒரே கட்சியை சேர்ந்த 2 பேர் களத்தில் நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மரக்காணம், 

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றனர். 
இந்தநிலையில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் பக்கம் கவுன்சிலர்களை இழுப்பதில் தீவிரம் காட்டினர். அந்த வகையில் கவுன்சிலர்களை சுற்றுலாதலங்களுக்கு அழைத்துச் சென்று கவனித்து திக்கு முக்காட செய்தனர்.
இந்தநிலையில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 

மரக்காணம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் 26 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க 17 இடங்களில் வெற்றி வாகை சூடியது. தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள்-1, அ.தி.மு.க.- 3, பா.ம.க.-2, சுயேச்சை-3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
தி.மு.க. கூட்டணியில் 18 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதால் மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை சுலபமாக தி.மு.க கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. 
ஆனால் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிப்பதில் தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன், மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோருக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. தங்களுக்கு சாதகமான கவுன்சிலர்களுக்கு வலைவீசி வருகின்றனர். 
இதற்கிடையே ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு கட்சி தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தவருக்கு தான் ஓட்டுபோட வேண்டும் என்றும், இதை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரித்துள்ளார். ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் களத்தில் நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடும் போட்டி

வானூர் ஒன்றியத்தை பொறுத்தவரை 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 11 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., சுயேச்சை தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 
தலைவர் பதவியை பிடிக்க 14 கவுன்சிலர்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தி.மு.க.வுக்கு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால் சுயேச்சை கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு வருகின்றனர். 

Next Story