தலைவாசல் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் மோதி வேன் தீப்பிடித்தது-டிராவல்ஸ் அதிபர் பலி-3 பேர் காயம்
தலைவாசல் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் வேன் மோதி தீப்பிடித்தது. இதில் டிராவல்ஸ் அதிபர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் வேன் மோதி தீப்பிடித்தது. இதில் டிராவல்ஸ் அதிபர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
வேன் தீப்பிடித்தது
தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சியை சேர்ந்தவர் பாரதி (வயது 20), டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது வேனில் நண்பர்கள் 2 பேருடன் ஆத்தூருக்கு சென்றார். பின்னர் இரவில் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை பாரதி ஓட்டினார். சந்தேரி பகுதியில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது.
மேலும் அந்த வேன் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு வந்த ரோந்து போலீசார் வேனில் இருந்த 3 பேரையும் மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாரதி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வேனில் எரிந்த தீயை சிறிது நேரம் போராடி அணைத்தனர்.
மினி லாரி மரத்தில் மோதியது
இதற்கிடையில் அந்த வழியாக வந்த மினிலாரியின் டிரைவர் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து பிரேக் போட்டார். அப்போது அந்த மினி லாரியும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் மினி லாரி டிரைவரான தீவட்டிப்பட்டியை சேர்ந்த இளையராஜா (29) என்பவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story