மரக்காணத்தில் முதல்முறையாக தொடக்க விழா ‘இல்லம் தேடிக்கல்வி’ மற்ற மாநிலத்துக்கெல்லாம் முன்னோடி திட்டம் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


மரக்காணத்தில் முதல்முறையாக தொடக்க விழா ‘இல்லம் தேடிக்கல்வி’ மற்ற மாநிலத்துக்கெல்லாம் முன்னோடி திட்டம்  மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 27 Oct 2021 5:06 PM GMT (Updated: 2021-10-27T22:36:03+05:30)

‘இல்லம் தேடிக்கல்வி’ மற்ற மாநிலத்துக்கெல்லாம் முன்னோடி திட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மரக்காணம், 

தமிழக அரசின் சார்பில் ‘இல்லம் தேடிக்கல்வி திட்டம்’ விழுப்புரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா முதன்முறையாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் முதலியார்குப்பம் கிராமத்தில் நேற்று நடந்தது.

 விழாவில் கலெக்டர் மோகன் வரவேற்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்ட விளக்கவுரையாற்றினார்.


விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் கையேட்டை வெளியிட்டு, அதற்கான செயலியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதாரண திட்டமல்ல

சிறப்பான திட்டத்தை உருவாக்கிய கல்வி அமைச்சரையும், உயர் அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். இல்லம் தேடி கல்வி என்பது சாதாரண திட்டம் அல்ல. மற்ற திட்டங்களை போல இதுவும் ஒரு திட்டம் என சொல்லிவிட முடியாது. இந்த திட்டம் தான் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்ற போகிறது. ஆயிரங்காலத்துக்கும் இந்த திட்டம் நிலைத்து நிற்க போகிறது. கல்வி புரட்சிக்கு இந்த இடத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.


பெரிய திட்டங்கள் எல்லாம் இப்படி சிறிதாக தொடங்கப்பட்டது தான் பின்னாளில் சாதனை திட்டங்களாக மாறின. நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாக கொண்டு சேர்த்தது ஆரம்ப கால திராவிட இயக்கம். 

திராவிடம் என்றால் என்ன என்று கேட்கும் கோமாளிகளும், அதைப்பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் திராவிடத்தின் கொள்கை என்பதை மறந்து விடக்கூடாது.

மாணவர்களுக்கு அதிகம்பாதிப்பு

நீதி கட்சி தோன்றிய பிறகு சென்னை மாகாணத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு எல்லாம் உணவளிக்க கூடிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து மறைந்த தலைவர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரால் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மேலம் செழுமைப் படுத்தப்பட்டது. இது போன்ற சிறப்பு மிக்க ஒரு திட்டம் தான் இல்லம் தேடி கல்வி எனும் திட்டம்.

கொரோனா தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அதில் பள்ளி மாணவர்களுக்கு தான் அதிகம். பள்ளிக்கு வந்து கல்வி கற்றவர்களை வீட்டுக்குள் முடக்கி வைத்தது இந்த கொரோனா. பள்ளிக்கூடம் என்ற பரந்த வெளியை பயன்படுத்த முடியாமல், வீட்டுக்குள் முடங்கி இருந்ததால் குழந்தைகள் மனதில் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்களின் படிப்பையும், படிப்பில் இருந்த ஆர்வத்தையும், கற்றல் ஆர்வத்தை கொரோனா குறைத்துவிட்டது.

கல்வி செல்வம்

இந்த பாதிப்பை சரி செய்யவே இல்லம் தேடி கல்வி திட்டம். இதற்கென்று அந்தந்த பகுதியில் தனியாக இடம் தேர்வு செய்யப்படும்.  அங்கு மாணவர்களுக்கு காலையிலோ, மாலையிலோ கூடுதலாக ஒரு மணி நேரமோ, 2 மணி நேரமோ பள்ளி போல் வகுப்புகள் நடத்த தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இதற்கு முன் வந்தால் அவர்களை வரவேற்க இந்த அரசு காத்து இருக்கிறது. படித்த இளைஞர்கள் இதில் பங்கேற்பதன் மூலம் தாம் பெற்ற கல்வியை பயனுள்ளதாக மாற்றலாம். கல்வி அறிவை பயன்படுத்துவதால் கல்விச் செல்வம் அதிகமாகும் என்று திருவள்ளுவரே குறளில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஒரு நெருக்கடி ஏற்பட்டால் தான் புதிய பாதை பிறக்கும். அப்படி கொரோனா ஏற்படுத்திய நெருக்கடியால் உருவானது தான் இந்த திட்டம். நேரடி வகுப்பு தரக்கூடிய நன்மையை ஆன்-லைன் கல்வி தர முடியாது என்பதே உண்மை.

 மீண்டும் பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்களை ஆசிரியர்கள் இனிமையாக நடத்த வேண்டும். கடந்த கால கசப்பை மறப்பதாக அது இருக்க வேண்டும். மாணவர்களும் தங்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். கவன சிதறல் கூடாது.

முன்னோடி திட்டம்

இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி திட்டமாக மாறப் போகிறது. தமிழக கல்வி துறை வலுவான கட்டமைப்பு கொண்டது. வட்டார கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரிகள் என அயராது பாடுபடுபவர்களுடன் பெற்றோர்களும் இணைப்பு செயல்பட வேண்டிய திட்டம். 

கல்வி செல்வத்தை அனைத்து தரப்பினரும் பெற்றாக வேண்டும்.‌ அதன் காரணமாக பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வியை மேம்படுத்த தி.மு.க. அரசு வகுத்து வைத்துள்ளது. சமூக நீதி, சுய மரியாதை, மனிதநேயம், சமத்துவம் கொண்ட மனிதர்களாக மாணவர்கள் வளர வேண்டும்.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்பது தான் தி.மு.க.வின் அடிப்படை கொள்கை. இந்த ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அல்ல இனத்தின் ஆட்சி என்பதை நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

 மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற மகத்தான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற இயக்கம் தான் தி.மு.க., இந்த நெறிமுறைகளுடன் சமூக, பொருளாதார கல்வி நிலையிலும் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.


நம்பர்-1

அனைத்து சமுதாய மக்களும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்திற்கு வந்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு அடிப்படை திராவிட இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி இந்த இனத்தின் அறிவையும், மானத்தையும் தட்டி எழுப்பிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போட்ட விதைகள் தான். ஏழை, எளிய விளிம்பு நிலை மக்கள், பட்டியல் இன மக்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சி செயல்படுத்தி வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற திசையை நோக்கி என்று இந்த நாட்டை வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வழியாக தமிழகத்தை உலகின் சிறந்த கல்வி மையமாக  மாற்ற முடியும்.

 ஒருதனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களை ஒப்பிடும் போது அவர்கள் கொடுக்கும் மதிப்பெண்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பர்-1 என்று மதிப்பிட்டுள்ளனர். என்னைப் பொருத்தவரை முதலமைச்சர் நம்பர் -1 என்பதை விட தமிழ்நாடு நம்பர்-1 என்று இருக்க வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்


நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா, ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம், தி.மு.க. மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஆதித்தன்,   விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி  குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Next Story