கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கம்?
இடைத்தேர்தல் தோல்வி, பிட்காயின் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நீக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கூட்டணி ஆட்சி
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க அப்போதைய கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதையடுத்து முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். பா.ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனால் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அவர் சட்டசபையில் பா.ஜனதாவின் பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.
இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வர் பதவி ஏற்றார். அவர்கள் 14 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
எடியூரப்பா ராஜினாமா
இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தில் அந்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவினர். அதன் பிறகு அதாவது கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
அவர் ஆட்சி அதிகாரத்தில் 2 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் வயது மூப்பு காரணமாக பதவியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து யாருமே எதிர்பார்க்காத நிலையில் போலீஸ் மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை, முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி
அவர் பதவி ஏற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் காலியாக இருந்த சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலை பா.ஜனதா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சந்தித்தது. ஆனால் அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இது பசவராஜ் பொம்மைக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிட்காயின் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதில் சில மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரமும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது பசவராஜ் பொம்மையின் தலைமை மீது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீது பா.ஜனதா மேலிடம் அதிருப்தியில் உள்ளது.
ஜெகதீஷ்ஷெட்டர் டெல்லி பயணம்
கடந்த 10-ந்தேதி டெல்லி சென்றிருந்த பசவராஜ் பொம்மை, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தல் தோல்வி, பிட்காயின் விவகாரத்தை குறிப்பிட்டு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மையை நீக்கிவிட்டு, எந்த குற்றச்சாட்டும் இல்லாத ஒருவரை முதல்-மந்திரி பதவியில் அமர்த்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பசவராஜ் பொம்மை டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் மாலை திரும்பிய நிலையில், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் நேற்று திடீரென உப்பள்ளியில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். இது பா.ஜனதாவில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் அவர் மட்டுமின்றி மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, சி.டி.ரவி, ஹாலப்பா ஆச்சார், முருகேஷ் நிரானி உள்ளிட்டவர்களின் பெயர்களும் உள்ளன.
பதவி தப்புமா?
பசவராஜ் பொம்மை மட்டுமின்றி குஜராத் மாதிரியில் ஒட்டுமொத்த மந்திரிசபையையும் மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதனால் பசவராஜ் பொம்மையின் பதவி தப்புமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Related Tags :
Next Story