திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் பிளேடால் கழுத்தை அறுத்த பெண்ணால் பரபரப்பு


திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் பிளேடால் கழுத்தை அறுத்த பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 6:16 PM IST (Updated: 22 Nov 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

நகை பறிப்பு வழக்கில் கைதானவரை விடுதலை செய்யக்கோரி திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகை பறிப்பு வழக்கில் கைது

சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நாயுடு முதல் தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி அம்மாயி (வயது 72). நேற்று முன்தினம் அதிகாலை வேலு, டீ வாங்க கடைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அம்மாயியிடம் முகவரி கேட்பதுபோல் வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அம்மாயி அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகையை பறித்ததுடன், வீட்டில் இருந்த 2 செல்போன்களையும் திருடிச்சென்று விட்டனர்.

இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் மேட்டு தெருவைச் சேர்ந்த வசந்த் (21) மற்றும் 3 சிறுவர்கள் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ பவுன் தங்க நகை மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீஸ் நிலையத்தில் வைத்து 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

தற்கொலை முயற்சி

அப்போது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு வந்த இளம்பெண் ஒருவர், திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் போலீஸ் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் பெயர் தேவி(21) என்பதும், ஏற்கனவே திருமணமான இவருக்கும், மூதாட்டி அம்மாயியிடம் சங்கிலி பறித்ததாக கைதான வசந்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வருவதும், வசந்த் கைது செய்யப்பட்டதை அறிந்த அவர், வசந்தை விடுதலை செய்யக்கோரி திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தேவி தற்கொலை செய்ய முயன்றது தொடர்பாகவும் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story