புதுச்சேரியில் மழை பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு
புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
புதுச்சேரி,
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால், விளைச்சலுக்கு தயாராகி இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக உள்துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று(திங்கள்கிழமை) புதுச்சேரிக்கு வந்தனர். நேற்று மாலை புதுச்சேரிக்கு வந்த மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி, துணை நிலை கவர்னர் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முதலாவதாக பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து இந்திரா காந்தி சதுக்கம், பாகூர் தொகுதியில் உள்ள வயல்வெளி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story