நாகை மாவட்டத்தில் பரவலாக மழை


நாகை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 24 Nov 2021 3:29 PM GMT (Updated: 24 Nov 2021 3:29 PM GMT)

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. 
நாகை 
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடந்த சில நாட்களாக நாகையில் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியத்துக்கு மேல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 மணிநேரம் பரவலாக மழை பெய்தது.  இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குடைப்பிடித்தவாறு சென்றனர். 
நாகூர், வேதாரண்யம் 
நாகூரில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வேதாரண்யம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
கீழ்வேளூர் 
கீழ்வேளூர் பகுதிகளில் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் மற்றும் சிக்கல், ஆழியூர், சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி, அகரகடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
வேளாங்கண்ணி 
நேற்று பெய்த கனமழையின் காரணமாக கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள அவாகனி (வயது 65) என்பவரின்  ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதம் ஏற்படவில்லை.  இடிந்து விழுந்த வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story