பெங்களூருவில் ரூ.900 கோடியில் 89 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் கால்வாய் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு


பெங்களூருவில் ரூ.900 கோடியில் 89 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் கால்வாய் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 2:40 AM IST (Updated: 25 Nov 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் புதிதாக ரூ.900 கோடியில் 89 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

ராஜகால்வாய்கள்

  பெங்களூருவில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  பெங்களூருவில் ராஜகால்வாய்களை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கர்நாடகத்தில் குறிப்பாக கடந்த 2 மாதங்களாக பெங்களூருவில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால் எலகங்கா உள்பட சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க ராஜகால்வாய்களை சீரமைக்க வேண்டும், அதன் நீர் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

ஜனவரியில் நிறைவடையும்

  அதனால் கால்வாய்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் சேர்க்கப்பட்ட 110 கிராமங்களில் கால்வாய்கள் அமைக்கப்படும். இதற்கு ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. அந்த தடைகளை அகற்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த அதிகாரிகள், செயற்பொறியாளர்கள் தங்களிடம் உள்ள விவரங்களை தெரிவித்தனர்.

  பெங்களூருவில் விருசபாவதி, கோரமங்கலா, சல்லகட்டா, ஹெப்பால் ஆகிய 4 கால்வாய்கள் உள்ளன. 842 கிலோ மீட்டர் நீளத்திற்கு ராஜகால்வாய் உள்ளது. இதில் 415 கிலோ மீட்டர் ராஜகால்வாயை மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 75 கிலோ மீட்டர் நீள ராஜகால்வாயை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதம் நிறைவடையும்.

நிதி பற்றாக்குறை இல்லை

  ராஜகால்வாய்களில் 94 முக்கிய சிக்கலான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை அடுத்த 2 மாதங்களில் மேம்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளேன். எலகங்கா, கே.ஆர்.புரம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். சல்லகட்டா, விருசபாவதி கால்வாய்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அங்கு 51 கிலோ மீட்டர் நீளத்திற்கு ராஜகால்வாயும், 38 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-ம் நிலை கால்வாயும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  ஆகமொத்தம் 89 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த கால்வாய்களை புதிதாக அமைக்க தேவையான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கு நிதி பற்றாக்குறை இல்லை. நகரின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளன. பெங்களூருவில் வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது எனது நோக்கம் ஆகும்.

ஒரு செயல் திட்டம்

  பெங்களூருவில் உள்ள 4 முக்கிய ராஜகால்வாய்களில் வரும் மழைநீர், நேரடியாக ஆறுகளுக்கு போய் சேரும்படி ஒரு பெரிய செயல் திட்டம் வகுக்கப்படும். அந்த நீர் எங்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கால்வாய் பிரச்சினையை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இதை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன்.

  கடந்த 2019-ம் ஆண்டில் ரூ.1,060 கோடி செலவில் 75 கிலோ மீட்டர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள 35 கிலோ மீட்டர் நீள் கால்வாய் பணிகள் வருகிற ஜனவரி மாதம் முடிவடையும். இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கும், தற்போது அறிவித்துள்ள திட்டத்திற்கும் தொடர்பு இல்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்ற...

  பெங்களூருவில் ராஜகால்வாய்களில் 2,626 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதில் 1,480 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 714 ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளேன்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், கலால்துறை மந்திரி கோபாலய்யா, நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா, நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  
சாலை குழிகள் மூடப்படுவது எப்போது?


பசவராஜ் பொம்மை கூறுகையில், "பெங்களூருவில் 130 என்ஜினீயர்களை நியமனம் செய்ய மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த என்ஜினீயர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடும் பணிகள் மழை நின்றவுடன் மேற்கொள்ளப்படும். முன்னுரிமை அடிப்படையில் பெரிய குழிகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். 

ஒரு சாலையில் நீண்ட தூரத்திற்கு தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அவற்றுக்கு முழுவதுமாக தார் போட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்றார்.

Next Story