மீஞ்சூர் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வார்டு உறுப்பினர் சாவு


மீஞ்சூர் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வார்டு உறுப்பினர் சாவு
x
தினத்தந்தி 25 Nov 2021 10:30 AM GMT (Updated: 25 Nov 2021 10:30 AM GMT)

மீஞ்சூர் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு எடுத்து சென்ற வார்டு உறுப்பினர் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் வடகிழக்கு பருவமழையும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கடந்த 19-ந்தேதி 36 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் கவுண்டர்பாளையத்தில் இருந்து சுப்பாரெட்டிபாளையம் செல்லும் ஆற்று பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு வெள்ளம் சென்று கொண்டிருந்தது.

இதனால் சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம் உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினந்தோறும் ஆற்றங்கரையில் உள்ள கவுண்டர்பாளையத்தில் இருந்து படகுகள் மூலம் உணவு கொண்டு செல்லப்பட்டு சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொசஸ்தலை ஆற்றங்கரையில் டிராக்டரில் இருந்து உணவுகளை இறக்கும்போது சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ரவி (வயது 49) தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு எலும்பு கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வினியோகம் செய்து உதவிய வார்டு உறுப்பினருக்கு நேர்ந்த சம்பவம் சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story