30 ஆண்டுகளுக்குபிறகு கரைபுரண்டு ஓடும் வைகை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மானாமதுரை வழியாக செல்லும் வைகையாற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் கரைபுரண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மானாமதுரை,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மானாமதுரை வழியாக செல்லும் வைகையாற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் கரைபுரண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர் ஆதாரம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செல்லும் வைகை ஆறு வழியாக சென்று அந்தந்த மாவட்டங்களில் முக்கிய நீர்ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் தொடர் மழை காலங்களில் இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது இந்த 5 மாவட்டங்களுக்கு சென்று விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால் வைகை அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகை அணை திறக்கப்பட்டு சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வைகையாற்றில் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை வழியாக சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை வழியாக சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக திருப்புவனம் மற்றும் மானாமதுரை வழியாக செல்லும் வைகையாற்றின் இருபுறத்தில் உள்ள கரைகளை தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
தண்ணீர் சேமிப்பு
இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வைகையாற்றின் கரைகளை தண்ணீர் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுவதால் இங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- பொதுவாக ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையின் போது வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சிவகங்கை மாவட்டத்தின் வழியாக செல்லும் வைகையாற்று பகுதிக்கு வருவதற்கு 3 நாட்கள் வரை ஆகும். அதன் பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே வைகையாற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் அதன்படி தண்ணீர் வரத்து குறைந்து பாலைவனமாக காணப்படும்.
நிலத்தடி நீர் உயர்ந்தது
இந்தநிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தற்போது வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இருபுறங்களை தொட்டவாறு தண்ணீர் செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கோடைக்காலங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறை இருக்காது. இதுதவிர இங்குள்ள படுகை அணையில் தண்ணீர் சேமித்து வருவதால் கோடைக்காலம் வரை தண்ணீரை பயன்படுத்தவும், விவசாயம் நடத்தவும் பயனாக அமைய உள்ளது.
வைகையாற்றை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தொடர்ந்து பாய்ந்து வரும் தண்ணீரால் பசுமையாக காட்சி அளிப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story