காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 6 ஆயிரத்து 700 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.43 கோடியே 22 லட்சம் பயிர்கடன்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் புதிதாக பயிர்கடன் தேவைப்படும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அணுகி பயன்பெறலாம்.
காஞ்சீபுரம்,
2022-23-ம் ஆண்டிக்கு பயிர்க்கடனளவு, கால்நடை வளர்ப்பு மற்றும் மின்வளத்தொழிலுக்கு நடைமுறை மூலதன கடனளவு நிர்ணயம் செய்வது தொடர்பான மாவட்ட அளவிலான தொழில் நுட்ப குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் மு.முருகன், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பேசியதாவது:- காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் குறுகிய கால பயிர்க்கடன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பயிர்கடன் வழங்க ஆண்டு குறியீடாக ரூ.70 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 6 ஆயிரத்து 700 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.43 கோடியே 22 லட்சம் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது பரவலான மழை பொழிவு இருப்பதால், புதிதாக பயிர் கடன் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உடனடியாக பயிர்கடன் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து உறுப்பினராக சேர்ந்து, விவசாய பயிர் கடன்களை பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story