ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழை


ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழை
x
தினத்தந்தி 5 Dec 2021 12:17 AM IST (Updated: 5 Dec 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழையால் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

ராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழையால் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
சாலைகளில் வெள்ளம்
ராஜபாளையம், சமுசிகாபுரம், வாகைகுளம்பட்டி, மில் கிருஷ்ணாபுரம், ஆசிரியர் காலனி, இ.எஸ்.ஐ. காலனி, கலங்காப்பேரி, கம்மாபட்டி ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இதனால் வாகைகுளம் கண்மாய் நிறைந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமுசிகாபுரம் பஞ்சாயத்து தலைவர் ராஜகோபால், தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து தலைவர் இசக்கிராஜ், கலங்காப்பேரி பஞ்சாயத்து தலைவர் சங்கிலிராஜ் ஆகியோர் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு எந்திரம் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.. ராஜபாளையம் நகர் பகுதியில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறு போல் சாலைகளை மூழ்கடித்து சென்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எம். நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் உணவுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் செண்பகத்தோப்பு போன்ற பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால் உஷார் நிலையில் இருக்கும்படி பொதுமக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் பலத்த மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 13 வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகள் விழுந்ததில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதம் இல்லை. வீடு இடிந்தவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமசுப்பிரமணியனிடம் மனு அளித்தனர்.
கோவிலுக்குள் தண்ணீர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2-வது முறையாக மழைநீர் கோவிலுக்குள் புகுந்து உள்ளது. இதனை தொடர்ந்து கோவில் தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி ஜாபர் ஆகியோர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மின் மோட்டார் கொண்டு தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பும் ஏற்கனவே மழைநீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story