முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 8:24 PM IST (Updated: 16 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி: 

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 142 அடியை எட்டியது. இதனிடையே கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 

இதையடுத்து கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தமிழகத்துக்கு வினாடிக்கு 1,867 கனஅடியில் இருந்து 700 கனஅடியாகவும், கேரளாவுக்கு வினாடிக்கு 446 கனஅடியில் இருந்து வினாடிக்கு 144 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு ஆயிரத்து 13 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 700 கனஅடியில் இருந்து வினாடிக்கு 900 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story