குளித்தலை அருகே குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 25 Dec 2021 4:11 PM GMT (Updated: 25 Dec 2021 4:11 PM GMT)

குளித்தலை அருகே வளையப்பட்டியில் நெகிழி குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் ஈடுபட்டனர்.

குளித்தலை, 
சாலைமறியல்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இரண்யம்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது வளையப்பட்டி. இங்குள்ள அண்ணா நகர் காலனி பொதுமக்கள் நேற்று வளையப்பட்டி-பணிக்கம்பட்டி செல்லும் சாலையில் திடீர் மறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- 
வளையபட்டி பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பிறர் சாதியினருக்கான சுடுகாடு தனித்தனியாக உள்ளது. இதில் பிற சாதியினர் பயன்படுத்தக்கூடிய சுடுகாடு உள்ள இடத்தின் அருகில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த குடிநீர் குழாய் சுற்றி உள்ள பள்ளங்களில் நெகிழி குப்பைகள் அதிகம் உள்ள கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. 
உயிரிழக்க நேரிடும்
 இதுபோன்ற நெகிழிக் குப்பைகள் கொட்டப்படுவதால் மழைக்காலங்களில் நெகிழிக் குப்பைகள் வழியாக தண்ணீர் பூமிக்கு அடியில் செல்லும்போது அது நச்சுத் தன்மையாக மாறி அது நிலத்தடி நீருடன் கலந்து விடும் சூழ்நிலை உள்ளது. அதுபோல் நிலத்தடி நீருடன் அந்த நச்சு நீர் கலந்தால் அந்த நீரை குடிநீராக பயன்படுத்தும் பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும். 
எனவே உடனடியாக குடிநீர் குழாயை சுற்றி கொட்டப்பட்டுள்ள நெகிழி குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நெகிழி குப்பைகளை அகற்றினால் மட்டுமே தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 
பரபரப்பு
மேலும் ஆதிதிராவிடர்களுக்கென உள்ள மயானத்திற்கு உரிய சாலை, மின் விளக்கு, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். பிறர் சாதியினருக்கான சுடுகாட்டை பொது சுடுகாடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், வடி கால்வாய்களை தூர்வார வேண்டும், காவிரி நீர் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். 
இதுகுறித்து கேட்ட அதிகாரிகள் நெகிழி குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தனர். மேலும் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story