நாளை மறுநாள் முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


நாளை மறுநாள் முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2022 10:01 PM GMT (Updated: 1 Jan 2022 10:01 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல் -அமைச்சர் அறிவித்து உள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் ரேஷன் கார்டுகள் 1,381 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டுகளுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
15-ந்தேதி விடுமுறை
இந்த பொருட்களை வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் 31-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு பெறும்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். மேலும் ரேஷன் கடைகளுக்கு வருகிற 7-ந்தேதி பணி நாளாகவும், அதற்கு பதிலாக வருகிற 15-ந்தேதி விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
இதனை கண்காணிக்க நடமாடும் கண்காணிப்பு அலுவலர்கள் குழு மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே ரேஷன் கார்டுதாரர்கள் மேற்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்

Next Story