திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 2 Jan 2022 2:46 PM GMT (Updated: 2022-01-02T20:16:44+05:30)

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மழையின் அளவு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு,

ஆவடி - 113 மி.மீ.,

சோழவரம் - 104 மி.மீ.,

செங்குன்றம் - 96.40 மி.மீ.,

ஊத்துக்கோட்டை - 87 மி.மீ.,

ஜமீன் கொரட்டூர் - 75 மி.மீ.,

தாமரைப்பாக்கம் - 52 மி.மீ.,

பொன்னேரி - 29 மி.மீ.,

பூந்தமல்லி - 28 மி.மீ.,

திருவாலங்காடு - 26 மி.மீ.,

திருவள்ளூர் - 23 மி.மீ.

பூண்டி - 20 மி.மீ.,

திருத்தணி - 10 மி.மீ.,

பள்ளிப்பட்டு - 18 மி.மீ.,

கும்மிடிப்பூண்டி - 15 மி.மீ.

ஆர்.கே.பேட்டை - 10 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களில் மொத்தம் 706.40 மில்லி மீட்டரும், சராசரியாக 47.09 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மழைநீர் வரத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 34.91 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது 3,118 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வினாடிக்கு 744 கன அடி கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 324 கனஅடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 14 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 3,297 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,731 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 148 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 23.45 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 895 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 107 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரி

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது 881 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,261 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 1,350 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 175 கன அடியாக உள்ளது. உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story