4 மாத பெண் குழந்தை கோவை என்ஜினீயருக்கு விற்பனை


படம்
x
படம்
தினத்தந்தி 11 Jan 2022 6:00 PM GMT (Updated: 2022-01-11T23:30:47+05:30)

மும்பையில் இருந்து கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை கோவை என்ஜினீயருக்கு ரூ.4.8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பையில் இருந்து கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை கோவை என்ஜினீயருக்கு ரூ.4.8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். 

குழந்தை கடத்தல்
மும்பை வி.பி. ரோடு போலீசில் கடந்த 3-ந் தேதி அன்வரி அப்துல் சேக் என்ற 50 வயது பெண் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், இப்ராகிம் சேக் என்பவரால் 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழில்நுட்ப தடயங்கள் மூலம் இப்ராகிம் சேக்கை (வயது32) கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலீசார் குழந்தையை மீட்க தாராவி, சயான், மலாடு, ஜோகேஸ்வரி, நாக்பாடா, கல்யாண், தானே ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது போலீசார் குழந்தை கடத்தல் தொடர்பாக 2 பெண்கள், 4 ஆண்களை கைது செய்தனர். அப்போது அவர்கள் கடத்தப்பட்ட குழந்தையை தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்றுவிட்டதாக கூறினர்.

கோவை என்ஜினீயர்

இதையடுத்து 2 தனிப்படை போலீசார் தமிழ்நாடு விரைந்தனர். அவர்கள் குழந்தையை மீட்க 3 மாவட்டங்களில் 4 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது குழந்தை கோவை, செல்வன்பட்டியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் ஆனந்த் குமார் நாகராஜிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற மும்பை போலீசார் குழந்தையை மீட்டனர்.
மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக மேலும் ஒரு பெண் மற்றும் 4 ஆண்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டனர்.

11 பேர் கைது

கைதானவர்கள் பெயர் இப்ராகிம் சேக் (32), செரு பீர் முகமது கான் (39), லெட்சுமி தீபக் முருகேஷ் (28), சதாம் அப்துல்லா ஷா (26), அம்ஜாத் சேக் (38), தாகிரா (35), கார்த்திக் ராஜேந்திரன் (31), சித்ரா கார்திக் (23), தமிழ் செல்வன் தங்கராஜ் (36), மூர்த்தி பழனிசாமி (39), ஆனந்த்குமார் நாகராஜன் (44) என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "முக்கிய குற்றவாளியான இப்ராகிம் சேக் கடத்தியதாக கூறப்படும் குழந்தை அவர் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணுக்கு பிறந்தது என்றும், குழந்தைக்கு அவர் தான் தந்தை என்றும் கூறுகிறார். எனவே டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளோம். குழந்தையின் தாயை கண்டுபிடிக்கவில்லை. குழந்தை நல கமிட்டியின் உத்தரவுப்படி மீட்கப்பட்ட குழந்தை தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளது" என்றார். 

குழந்தை கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story