தைபொங்கலை வரவேற்கும் விதமாக சலங்கை மாடு ஆட்டம்


தைபொங்கலை வரவேற்கும் விதமாக சலங்கை மாடு ஆட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2022 6:50 PM GMT (Updated: 11 Jan 2022 6:50 PM GMT)

தைபொங்கலை வரவேற்கும் விதமாக கிராமங்களில் தேவராட்டம், சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்று வருகிறது.

குடிமங்கலம்
தைபொங்கலை வரவேற்கும் விதமாக கிராமங்களில் தேவராட்டம், சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்று வருகிறது.
சலங்கை மாடுகள்
உடுமலை சுற்று வட்டார கிராமங்களில் தைப்பொங்கலை வரவேற்கும் வகையில் உருமி இசைக்கேற்ப ஆடும் வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கைமாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. 
கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது. பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகள் மாட்டுப்பொங்கலன்று ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உருமி இசைக்கேற்ப ஆடுகின்றன. அதைத்தொடர்ந்து சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்து வழிபடுகின்றனர்.
தேவராட்டம்
மார்கழி மாதத்தில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊருக்கு நடுவில் ஒன்று கூடுகின்றனர். உருமி இசைக்கு ஏற்ப காலில் சலங்கைகள் கட்டிக்கொண்டு தேவராட்டம் ஆடுகின்றனர். தேவராட்டம் தொடங்கும் போது மெதுவாக ஆரம்பித்து அதிவேகமாக உச்ச நிலையை அடைந்த பின்னர் மெதுவாக முடிகிறது. 
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கல்நகரம், லிங்கம்மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக கிராமங்களில் தேவராட்டம், சலங்கை மாடு ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

Next Story